தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை மாதத்தன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஒருநாள் மட்டும் கொண்டாடும் பண்டிகை கிடையாது. போகி பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். அதனால் தான் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் என்று கூறுகின்றோம். தற்போது இந்த நான்கு பண்டிகைகளும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்று விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
போகிப் பொங்கல்:
போகிப் பண்டிகை அல்லது போகிப் பொங்கல் என்பது பொங்கலுக்கு முன்னாடி நாள் அதாவது மார்கழி கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகியன்று வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை தீயில் போட்டு எரித்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தவறான எண்ணங்களும் அந்த தீயில் எரிந்து, இந்த ஆண்டு நல்ல பலன்களையும், நல்ல எண்ணங்களையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் தான் ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி’ என்று சொல்வார்கள்.
தைப் பொங்கல்:
தை மாதத்தின் 1 ஆம் நாள் தைப் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உழவுத் தொழிலுக்கு உதவியாக இருக்கும் சூரியக் கடவுளுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக அதிகாலையில் நல்ல நேரம் பார்த்து வீட்டு வாசலில் புது பானையில் பொங்கல் வைத்து அதை சூரிய கடவுளுக்கு படைத்து விட்டு பின்பு அனைவருக்கும் வழங்குவார்கள். இப்பண்டிகையை வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என கொண்டாடுவார்கள்.
இதையும் படிங்க | தைப் பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் குறித்த முழு தகவல்கள்..
மாட்டுப் பொங்கல்:
விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையே மாட்டுப் பொங்கல். இது தை 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று வீட்டில் உள்ள மாடு, ஆடு ஆகியவற்றை குளிக்க வைத்து உடல் மற்றும் கொம்புகளில் வண்ணம் பூசி, புது கயிறு மாற்றி, பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து அலங்கரித்து தொழுவத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
காணும் பொங்கல்:
பொங்கலின் கடைசி பண்டிகை காணும் பொங்கல். இந்த பண்டிகை தை 3 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்று சொல்வதுண்டு. சில இடங்களில் இந்த நாளை கரிநாள் என்றும் சொல்வார்கள். அதாவது, இந்த நாளில் சொந்த பந்தங்களுடன் அசைவம் சமைத்து சாப்பிட்டு கொண்டாடுவார்கள். பல ஊர்களில் ஜல்லிக்கட்டு, கோலப்போட்டி, உரி அடி, வலுக்கு மரம் ஏறுதல் போன்ற தமிழ் வீர விளையாட்டுகள் நடத்துவார்கள்.