Talcum Powder Side Effects: வியர்வை மற்றும் துர்நாற்றத்தை போக்குவதற்காகவும், கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே டால்கம் பவுடரை தினமும் பயன்படுத்தி வருகின்றோம். குறிப்பாக, கோடைக்காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் அரிப்பு மற்றும் பிற பிரச்சனைகளை போக்குவதற்கும் கையில் எடுக்கும் ஆயுதமே டால்கம் பவுடர் தான்.
முகம் மட்டுமல்லாமல் உடலின் பல பகுதிகளிலும் பவுடரை உபயோகிக்கும் வழக்கம் உண்டு. பவுடர் நமது சருமத்தின் துளைகளை மூடி, வியர்வையை வெளியேறாமல் தடுக்கிறது. பார்ப்பதற்கு வெண்மையாக, நல்ல வாசனையாக இருந்தாலும் இதில் ஏராளமான ஆபத்துகளும் மறைந்திருக்கின்றன. அதற்கு காரணம் இதில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கெமிக்கல் தான்.
நச்சுதன்மை வாய்ந்த கெமிக்கல்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் டால்கம் பவுடரானது ஹைட்ரேட்டட் மெக்னீசியம் சிலிக்கேட் (Talc) என்ற கனிம பொருளை கொண்டு தான் தயார் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த டால்க் அனைத்து வகையான அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்க் கனிமமானது கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) என்ற நச்சுத்தன்மை வாய்ந்த கனிமம் வெட்டி எடுக்கப்படும் அதே பகுதியில் தான் காணப்படுகிறது.
சில சமயங்களில், ஆஸ்பெஸ்டாஸ் வெட்டப்பட்டு பதப்படுத்தப்படுத்தும்போது டால்க்குடன் கலக்கலாம். இதை கொண்டு டால்கம் பவுடர் அல்லது அழகு சாதன பொருட்களை தயாரிக்கும்போது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவிற்கு நச்சுத்தன்மையுடையாத மாறுகிறது.
புற்றுநோயை உண்டாக்கும் டால்கம் பவுடர் பயன்பாடு:
ஒருவேளை நாம் தினமும் பயன்படுத்தும் டால்கம் பவுடரில் இந்த ஆஸ்பெஸ்டாஸ் கலந்து இருந்தால், அதை நாம் சுவாசிக்கும்போது நம்மையும் அறியாமல் உள்ளே சென்று நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதேபோல், சில பெண்கள் டால்கம் பவுடரை பிறப்புறுப்பு பகுதியில் உபயோகிக்கும் பழக்கம் இருக்கும்.
அப்படி பயன்படுத்தும்போது அந்த பவுடர் கர்ப்பப்பை, கருக்குழாயின் வழியாக சினைப்பையை சென்றடைகிறது. இதன் காரணமாக சினைப்பைப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகளை பற்றி யோசித்து பாருங்கள்.
இதில் இருந்து தப்பிப்பது எப்படி?
எனவே, டால்கம் பவுடரை குழந்தையின் உடல் முழுவதும் அள்ளிக்கொட்டுவதை தவிர்த்துவிட்டு, முடிந்த வரை பவுடரே பயன்படுத்தாமல் வேறு ஏதாவது ஆப்ஷன் இருக்கிறதா என்று மருத்துவரிடம் பேசுவதே நல்லது. பெரியவர்களுக்கும் இதே யோசனை பொருந்தும். அப்படியில்லையென்றால், ஒவ்வாமை குறைவான அல்லது ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பவுடர்களைப் பயன்படுத்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அது பாதுகாப்பானது.