சமீப காலமாகவே ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இப்படி கூடவா ஏமாற்றுவார்கள் என்று வியக்கும் அளவிற்கு புது புது யுக்திகளை கையாண்டு பணத்தை ஆட்டையப் போட்டு வருகின்றனர் பண மோசடி ஆசாமிகள். அப்படி சமீபத்தில் ஒரு புதிய மோசடி அறங்கேறி வருவதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஸ்டேட் பேங்க் வலியுறுத்தியுள்ளது.
அதாவது, ”அன்புள்ள எஸ்பிஐ வாடிக்கையாளரே, மோசடியில் ஈடுபடும் நபர்கள் சிபிஐ அல்லது தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளாக தங்களை காட்டிக்கொண்டு, அழைப்பு, எஸ்.எம்.எஸ் மூலம் மக்களை தொடர்பு கொண்டு, பொய்யான கதைகளை கட்டி, உங்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக சட்ட நடவடிக்கை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டலாம். இந்த மாதிரியான அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம். மேலும், இந்த புதிய மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்” என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு பில்லியன் கணக்கான பணம் அபேஸ்:
இந்த மாதிரியான மோசடியை “ஃபிஷிங்” என்று சொல்வார்கள், இதில் மோசடி செய்பவர்கள் நம்மிடம் இருந்து பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை பெறுவதற்காக நம்மை மிரட்டுவதற்காக அரசாங்க அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொள்வார்கள். சமீப காலமாகவே இந்த ஃபிஷிங் மற்றும் ஆள்மாறாட்டம் மோசடி உள்ளிட்ட இந்த மாதிரியான மோசடிகள் உலகளாவிய பிரச்சினையாகவே மாறிவிட்டன.
ஒவ்வொரு ஆண்டும் மோசடியால் மில்லியன் கணக்கான டாலர்கள் இழக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வகையான நிதி மோசடிகளால் உலகளவில் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழக்கப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சிபிஐ, ஐடி மோசடி இப்படியெல்லாம் கூட நடக்கலாம்:
நம்மிடம் இருந்து பணத்தை ஏமாற்றுவதற்காக மோசடிக்காரர்கள் எந்த மாதிரியான யுக்திகளை பயன்படுத்துகிறார்கள், நம்மை எதையெல்லாம் சொல்லி மிரட்டுவார்கள் என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.
தொடர்பு கொள்ளுதல்:
இந்த மாதிரி மோசடியில் ஈடுபடுபவர்கள், முதலில் ஏமாற்றக்கூடிய வாடிக்கையாளரை அடையாளம் கண்டு அவரை ஃபோன் அல்லது வீடியோ கால் மூலம் தொடர்புக் கொள்கிறார்கள். பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடன் அவரைப் பற்றிய சில முக்கியமான தகவல்கள் இருப்பதாக வாடிக்கையாளரை நம்ப வைக்கிறார்கள். அதாவது, கேஒய்சி எண் (KYC No), முகவரி அல்லது சொத்துக்கள் போன்ற வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் தங்களிடம் இருப்பதாக கூறுவார்கள்.
பாதிக்கப்பட்டவரை பயமுறுத்துதல்:
உதாரணமாக, உங்க சொத்து குறித்த அனைத்து தகவல்களையும் நீங்கள் பட்டியலிட்ட சொத்து இணையதளங்கள், சொத்து தரகர் இணையதளம் அல்லது சொத்துப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள தரவுக் கசிவில் இருந்தோ எடுத்து, அதை நீங்கள் நம்பும் அளவிற்கு டிசைன் செய்து, சமீபத்தில் நீங்கள் வாங்கிய/விற்ற சொத்தைப் பற்றி உங்களிடம் எடுத்துரைத்து, நீங்கள் அதற்குத் தகுந்த வருமான வரி கட்டவில்லை என்றும் மிரட்டலாம்.
போலியாக கதை கட்டுதல்:
மோசடி செய்பவர் உண்மையான சிபிஐ, வருமான வரி அல்லது பிற அரசுத் துறை அதிகாரி என்று வாடிக்கையாளர் நம்பியதும், மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவர் வரி ஏய்ப்பு செய்ததாகவோ அல்லது முக்கியமான சட்டப்பூர்வ நடைமுறையைத் தவறவிட்டதாகவோ கூறி, அதனால் நீங்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு போலியான கதையை கட்டி பாதிக்கப்பட்டவரை மிரட்டுவார்கள். பொதுவாக, “சிறை, கைது மற்றும் சட்ட நடவடிக்கைகள்” என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் பயப்படுவது வழக்கம். இந்த பயத்தையும் பீதியையும் தான் மோசடி ஆசாமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
நாடகத்தை அரங்கேற்றுதல்:
வாடிக்கையாளர் பயந்துவிட்டதை தெரிந்துக்கொண்ட மோசடி செய்பவர், ஆவணங்களை ஆய்வு செய்வது போல் நாடகத்தை அறங்கேற்றுவர். அதன்படி, உண்மையாக போலீஸ் விசாரணை செய்வது போல், பாதிக்கப்பட்டவரின் ஆதார் விவரங்கள், வங்கி கணக்கு எண்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு மிரட்டுவார்கள். பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்களை எளிதில் பெற மோசடியாளர்கள் இந்த நாடகத்தை தான் அறங்கேற்றுகிறார்கள்.
பிரச்சனையில் இருந்து தப்பிக்க வழி:
விசாரணை முடிய ரொம்ப நாள் ஆகும் மற்றும் முழுமையான சரிபார்ப்புக்குப் பிறகே உங்களை விடுவிப்போம் என்று பாதிக்கப்பட்டவர்களை நன்றாக பயமுறித்தி வலையில் சிக்க வைத்துவிடுகிறார்கள். இதை பாதிக்கப்பட்டவர் நம்பிவிட்டால், மோசடி செய்பவர் ஒரு வழியையும் கொடுக்கிறார்கள். அதாவது, நீங்கள் லஞ்சம் கொடுத்தால் உங்களுடைய வரி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தையும் ‘அதிகாரி’ கவனித்துக்கொள்வார் என்று பாதிக்கப்பட்டவரிடம் உறுதியளிக்கிறார்கள். பிறகு, விசாரணை முடிந்ததும் பணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் ஆசை வார்த்தை சொல்லி பணத்தை தங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்புமாறும் கேட்கிறார்கள்.
இந்த மாதிரியான ஆன்லைன் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?
இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் தடுப்பதற்கு சில அத்தியாவசிய குறிப்புகளை தெரிந்துக்கொள்வோம்.
- பொதுவாக எந்தவொரு அரசாங்க அமைப்பும் ஃபோன், எஸ்எம்எஸ், அல்லது வீடியோ அழைப்பு மூலம் விசாரணை நடத்தவும், சட்ட விஷயங்களை தீர்க்குமாறும், தனிப்பட்ட தகவல்களை அளிக்குமாறும் கேட்பதில்லை என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
- அப்படியே அழைப்பு வந்தால் உடனே அந்த அழைப்பை துண்டித்து விட்டு, அதே எண்ணை டயல் செய்யுங்கள். ஏனென்றால், ஏமாற்றுக்காரர்கள் இணைய நெறிமுறை (VoIP) அல்லது பிற இணையம் அடிப்படையிலான அழைப்பைப் பயன்படுத்துவதால், incoming calls ஐ அனுமதிக்காது. அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்.
- உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் உடனே ஃபேங்க் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சூழல் குறித்து புகாரளித்துவிடுங்கள்.
- சட்ட நடவடிக்கை அல்லது அபராதம் விதிக்கப்படும் என யாராவது உங்களை மிரட்டினால் எச்சரிக்கையாக இருங்கள். பதற்றமடைய வேண்டாம், அந்த நபரை அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது அரசு அலுவலகத்திலோ உங்களைச் சந்திக்கச் சொல்லுங்கள்.
- இதுதான் மிகவும் முக்கியமான விஷயம். அதாவது, ஃபோன் அல்லது எஸ்எம்எஸ் மூலம் யாராவது உங்களுடைய தனிப்பட்ட அல்லது பேங்க் சம்பந்தமான எந்த தகவலை கேட்டால் தைரியமாக பேசுங்கள். எக்காரணத்திற்காகவும் தகவல்களை மட்டும் பகிர வேண்டாம்.
- நீங்க பயன்படுத்தும் ஒவ்வொரு யுபிஐ ஆப்களுக்கும் (UPI apps) தனித்தனி கடவுச்சொற்களை (passwords) பயன்படுத்துங்கள். அதேபோல், பேங்க் அக்கவுண்ட்டில் இரு காரணி அங்கீகார (two-factor authentication) அம்சத்தை ஆன்(On) செய்து வைத்துக் கொள்ளுங்கள்.