விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான படம் ‘நானும் ரவுடி தான்’. இந்த படத்தை நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிந்துக் கொண்டிருந்தபோதுதான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பல பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நயன்தாரா.
இந்த நிலையில், நயன்தாரா தன்னுடைய திருமணத்தையும், திரை வாழ்க்கையையும் ஆவணப்படமாக எடுத்து அந்த படத்தின் டிரைலரை கடந்த நவம்பர் மாதம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்திருந்தார். நயன்தாரா பிஹைண்டு தி ஃபேரிடேல் (Nayanthara: Behind the Fairytale) என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த டிரைலரில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம்பெற்றுள்ள 3 விநாடி பாடல் காட்சிகளை பயன்படுத்தி இருந்தனர். தன்னிடம் அனுமதி பெறாமல் அந்த காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தரப்பில் இருந்து நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.
மேலும், கொந்தளித்த நயன்தாரா, நடிகர் தனுஷை தாக்கி 3 பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ‘தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார் நயன்தாரா. இந்த அறிக்கை தமிழ் திரையுலகையும் தாண்டி, ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதைத் தொடர்ந்து தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஹிந்தி யூடியூப் சேனலுக்கு நயன்தாரா பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், தனுஷ் பற்றி அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார். அதில், “நான் செய்யும் செயல் எனக்கு சரி என்று தோன்றும்போது நான் ஏன் மற்றவர்களை பார்த்து பயப்பட வேண்டும். எல்லோரும் என்னுடைய படத்தை பிரமோஷன் செய்வதற்காக தான் இப்படி செய்து வருவதாக கூறிகின்றனர்.
ஆனால், அதெல்லாம் உண்மை கிடையாது. எங்கள் காதல் அறிமுகமான இடத்தையும், அந்த தருணத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் அந்த காட்சிகளை பயன்படுத்தினோம். நான்கு வரிகளுக்காக இப்படி ஒரு வழக்கு நிச்சயம் தேவையா? நான் நடிகர் தனுஷை சந்தித்து பேசுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. அவருடைய நண்பர்களின் மூலமாக முயற்சி செய்தும் நடக்கவில்லை. ஒரே ஒரு போன் கால் பண்ணி இருந்தா என்ன பிரச்சனை? இது எப்படி சரி செய்யலாம் என பேசி தீர்த்து இருக்கலாம்.
ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்காமல் இப்படி மோசமாக நடந்துக் கொண்டது என்னை மனதளவில் பாதித்தது. ஆரம்பத்தில் நானும், தனுஷும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம். ஆனால், திடீரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை. என்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்திய காட்சிக்கு ரூ.10 கோடி கேட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதன் காரணமாகவே அப்படி ஒரு கடிதம் எழுதினேன்” என்று நயன்தாரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.