யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் லைட் (UPI Lite) என்பது பயனர்கள் UPI பின்னைப் (UPI PIN) பயன்படுத்தாமல் ஒரு சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை (transaction) செய்துக் கொள்ள உதவும் ஒரு வாலட் (wallet) ஆகும். முன்னதாக இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 ஆக இருந்தது.
இந்த நிலையில் தான், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) யுபிஐ லைட் சேவையின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்காக ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, டிசம்பர் 04, 2024 ஆம் தேதியில் இருந்து, UPI Liteக்கான வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 -ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், மொத்த வாலட் வரம்பை ரூ.2000 -ல் இருந்து ரூ.5000 ஆகவும் உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் ஒருவர் பாஸ்வோர்டு இல்லாமலேயே ஒரு நாளுக்கு ரூ.5000 வரையில் யுபிஐ லைட் (upi lite limit per day) மூலம் பணம் செலுத்த முடியும். அதுமட்டுமல்லாமல், பயன்படுத்திய வரம்பை AFA உடன் ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே நிரப்ப முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக, யுபிஐ லைட் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தங்கள் டிஜிட்டல் வாலெட் இருப்பை மேனுவலாக மீண்டும் ரீசார்ஜ் வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த செயல்முறையை எளிமையாக்க, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆட்டோ-டாப்-அப் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலமாக, யுபிஐ லைட் சேவையை பயன்படுத்தும் பயனர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச வரம்புக்கு கீழே வாலெட் பேலென்ஸ் செல்லும்போது, யுபிஐ லைட் இருப்பு தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட தொகையால் மீண்டும் ரீலோட் செய்யப்படும்.
யுபிஐ லைட் சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய வசதியான வழியை வழங்கினாலும், யுபிஐ பிளாட்ஃபார்ம் பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த அளவு நவம்பரில் 7 சதவீதமாக குறைந்து 15.48 பில்லியனாகவும், மொத்த பரிவர்த்தனை மதிப்பு 8 சதவீதமாக குறைந்து ரூ.21.55 டிரில்லியனாகவும் குறைந்துள்ளதாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்ட தரவு காட்டுகிறது. இந்த சரிவானது பண்டிகை காலத்திற்குப் பிந்தைய மந்தநிலையால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த சரிவு தற்காலிகமானதாக இருந்தாலும், கவனிக்க வேண்டியதாக உள்ளது. ஏனென்றால், அக்டோபர் மாதத்தில் மட்டும் 16.58 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் 23.50 டிரில்லியன் மதிப்பினலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு யுபிஐ செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து இந்த பண பரிமாற்ற எண்ணிக்கை தான் அதிகப்படியான பரிவர்த்தனையாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பேங்க் அக்கவுண்ட் இல்லாமலே இனி ஈஸியா ஆன்லைனில் பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?