சமீப காலமாகவே பருவமடைந்த பெண்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டி. இது வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் உடம்பில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இல்லையென்றால், பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை உண்டாக்கலாம்.
பிசிஓடி (PCOD) என்றால் என்ன?
பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உதவும் இனப்பெருக்க உறுப்பே கர்ப்பப்பை. கர்ப்பப்பையானது கர்ப்பம் தரிப்பதற்கு உதவும் அண்டவிடுப்பின் செயல்முறையை கட்டுப்படுத்தும் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்ற சொல்லக்கூடிய சினைப்பைகளில் சின்ன சின்ன நீர்க்கட்டிகள் தோன்றுவதே பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் (Polycystic Ovarian Disease) என்று அழைக்கப்படுகிறது. சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதால், கருமுட்டைகள் வெளியே வராது, இதனால் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.
பிசிஓடி, பிசிஓஎஸ் இரண்டும் ஒன்னா?
பிசிஓடி (PCOD) என்பது கருப்பையில் முதிர்ச்சியடையாத முட்டைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படுகிறது. ஆனால், பிசிஓஎஸ் என்பது கருப்பையில் ஆண்ட்ரோஜன்கள் (ஆண் ஹார்மோன்கள்) அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படுவதாகும்.
பிசிஓஎஸ் (PCOS) இருந்தால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் வரலாம். கருச்சிதைவு, குறைப்பிரசவம், கருப்பைச் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு ஹார்மோன் மருந்துகளால் மட்டுமே சிகிச்சையளிக்க முடியும்.
பெண்களுக்கு நீர் கட்டி எதனால் வருகிறது?
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடலுழைப்பு இல்லாதது, கார்போஹைட்ரேட் அதிகமாக சாப்பிடுவது போன்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களாலும் பிசிஓடி பிரச்சனை வரலாம்.
குடும்பத்தில் யாராவது இந்த பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உங்களுக்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு மரபணு தான் காரணம்.
கருப்பைகள் அதிகப்படியான ஆண்ட்ரோஜனை உற்பத்தி செய்தாலும், இந்த பிசிஓடி பிரச்சனை வரலாம்.
உடல் இரத்த சர்க்கரையை குறைப்பதற்காக அதிக இன்சுலினை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அதிகப்படியான இன்சுலின் உடலில் ஆண் ஹார்மோன்களை அதிகரிக்க செய்கிறது. இதுவும் பிசிஓடிக்கு வழிவகுக்கும்.
கர்ப்பப்பை நீர்க்கட்டி அறிகுறிகள்
பிசிஓடி பிரச்சனைக்கான முதல் அறிகுறியே முறையற்ற மாதவிலக்கு தான். அதாவது, பெண்களுக்கு மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். ஆனால், பிசிஓடி பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு 35 நாட்கள் அல்லது அதற்கு மேல் மாதவிடாய் வராமல் இருக்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் திருமணமான பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படும்.
ஆண்ட்ரோஜன்கள் அதிகமாக சுரப்பதால் ஆண்களுக்கு இருப்பது போல முகம், மார்பு, முதுகு அல்லது பிட்டம் போன்ற பகுதிகளில் அதிகப்படியாக முடி வளர்ந்து காணப்படும்.
முகத்தில் அதிக அளவில் பருக்கள் வருவது மற்றும் கழுத்தில் கருப்பு நிறம் படர்ந்து இருப்பது ஆகியவறையும் பிசிஓடிக்கான அறிகுறியே.
திடீர் எடை அதிகரிப்பு, அதிகமாக முடி உதிர்தல் மற்றும் வலுவிலந்த முடி போன்றவையும் பிசிஓடி இருப்பதற்கான அறிகுறிகளே.
எனவே, இவற்றில் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வதன் மூலம் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
இதையும் படிங்க | கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழம் சாப்பிடலாமா?