டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் போதிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பொதுமக்களே பேசதொடங்கியிருப்பது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத்தில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவை கடுமையாக தாக்கினார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலை தொடங்கியது. முதலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். பிறகு காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் களைகட்ட தொடங்கியது.
மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது குறித்து சட்டப்பேரவையில் அனல் பறக்க விவாதம் நடைபெற்றது. மதுரையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது பெரும் அதிர்வலையை எற்படுத்தியதோடு, சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய மற்றும் மாநில அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. பின்னர் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம் அனைத்து கட்சியின் ஆதாரவோடு நிறைவேறியது.
டங்ஸ்டன் என்றால் என்ன?
டங்ஸ்டன் என்பது ஒரு கனிமவேதியியல் தனிமம். ராக்கெட், ஏவுகணை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பயன்படுத்தப்படும். 3000 டிகிரி செல்ஷியஸ்-ல் மட்டுமே டங்ஸ்டனை உருக்க முடியும். அதன் உறுதித்தன்மையை கருத்தில் கொண்டு தான், டங்ஸ்டன் ராக்கெட்களில் பயன்படுத்தப்படுவதாக விஞானிகள் கூறுகிறார்கள். சீனா, ரஷியா போன்ற நாடுகளில் இருந்து டங்ஸ்டனை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. தற்போது மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் இருப்பதால் அதனை எடுக்க ஒன்றிய அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலை கடந்த சில நாட்களாக பரபரப்பாக்கியுள்ளது.
எடப்பாடியின் குற்றச்சாட்டு
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்போவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு மசோதா தாக்கல் செய்தபோது திமுக எம்.பி-க்கள் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெண்டர் கோரப்பட்ட போதும், மாநில அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என ஒன்றிய அரசு கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க திமுக எம்.பி-க்கள் தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
”டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தம் அறிவித்தது முதல் இறுதி செய்தது வரை தமிழக அரசு அமைதி காத்தது. தங்களது தவறு தெரியவந்ததும், பிரச்சனையை பூசிமொழுகி தமிழக அரசு மறைக்கப்பார்க்கிறது. ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது” என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு கனிம வள திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ”நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு மெஜாரிட்டி இருந்ததாகவும், திமுகவால் எப்படி தடுக்க முடியும்”, என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பதிலளித்தது வேடிக்கையாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. மெஜாரிட்டி இருந்தாலும் நாடாளுமன்றம் முடங்கும் வகையில் திமுக எம்.பி-க்கள் செயல்பட்டிருக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். குறிப்பாக மதுரை வாசிகள். நாடாளுமன்றத்தில் அமைதி காத்து, தங்களுக்கு பிரச்சனை வரும் என அறிந்த பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது முழூ பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதனால் ”தவளை தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலினையும், திமுகவினரையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.