கர்ப்ப காலத்தில், அனைத்து பெண்களுமே தன் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனாலேயே, தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், தன் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து, குறிப்பாக பழவகைகளை சாப்பிடும்போது மிகவும் ஜாக்கிரதையாக சாப்பிடுவார்கள். ஏனென்றால், சில பழங்கள் கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றன.
அதேபோல தான், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்குமே அவகேடோ பழத்தை சாப்பிடலாமா என்ற சந்தேகம் இருக்கும். உண்மையில் அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் சுவையானது மட்டுமல்ல, எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தற்போது இந்த பதிவில் கர்ப்பிணிகள் அவகேடோ பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் (avocado fruit benefits in tamil) கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
செரிமானத்திற்கு உதவும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த சமயத்தில் அவகெடோ பழத்தில் சேர்த்துக் கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் குறையும். மேலும், ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கும் உதவும். காரணம் இந்த பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் சத்து தான். அதுமட்டுமல்லாமல், இந்த பழம் கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியாவின் அபாயத்தையும் குறைக்கும்.
ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் கிடைக்கும்
வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை, நரம்பு மற்றும் இரத்த சிவப்பணு வளர்ச்சிக்கு கலோரிகள் அதிகம் தேவைப்படும். இந்த கலோரிகளை பெற அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உதவுகின்றன. இந்த கொழுப்புகள் கர்ப்பிணிகளின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவிபுரிகிறது.
காலை நோய்க்கு மருந்து
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் முழுவதும் பெண்கள் காலை நோயை (morning sickness) அனுபவிப்பார்கள். இதனால், உடல் முற்றிலும் பலவீனமடைந்து சோர்வாக உணர்வார்கள். அவகேடோ பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்து, அந்த காலை நோய்க்கான அறிகுறிகளை குறைப்பதோடு, அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்
அவகேடோ பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிடுவதால், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது. மேலும், ஆரோக்கியமான சீரான இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவும்.
கர்ப்பக் கால இரத்த சோகையை தடுக்கும்
பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது கர்ப்பக் கால இரத்த சோகையை ஏற்படுத்தும். இதை தடுக்க அவகேடோ பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இதில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.
குறிப்பு: எந்தவொரு உணவை எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்க மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்வது பாதிப்புகளை குறைக்கும். எனவே, கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஒருவார்த்தை கேட்டுக்கொள்வது நல்லது.