சமீப காலமாகவே வயர்லெஸ் ஹெட்ஃபோனான ஏர் பாட்ஸ் (AirPods) ஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வயர்டு ஹெட்ஃபோனாக இருந்தால் ஃபோனுடன் கண்டிப்பாக செருகியிருக்க வேண்டும், அதுவே ஏர் பாட்ஸாக இருந்தால் அந்த கவலையே வேண்டாம். முழுக்க முழுக்க வயர்லெஸ் தான், ப்ளூடூத் மூலமே கனெட் (Connect) செய்துக் கொள்ளலாம்.
அதனால், நம்மில் பெரும்பாலானோர் ஏர் பாட்ஸ் ஸ்டைலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு எந்த நேரம் பார்த்தாலும் காதில் மாட்டிக் கொண்டிருப்பார்கள். இப்படி அதிக நேரம் பயன்படுத்துவது மூளை கேன்சரை உண்டாக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அது உண்மையா? இல்லையா? இது குறித்து மருத்துவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஏர் பாட்ஸ் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வருமா?
வயர்லெஸ் ஹெட்ஃபோன் சாதனங்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கலாம். ஆனால், அவற்றில் இருந்து வரும் மின் காந்த புலங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ஆனால், அதற்கான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல், ஏர் பாட்ஸ் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வரும் என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால், ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FFCC) மற்றும் அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சு பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையம் (ICENIRB) போன்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவதால், ஏர் பாட்ஸ் வெளியிடும் கதிர்வீச்சின் அளவுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
இந்த பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்
கேன்சர் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆய்வுகள் கூறினாலும், வயர்லெஸ் சாதனங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம். அதனடிப்படையில், தினமும் 60 நிமிடங்களுக்கு மேல் ஏர் பாட்ஸ், ஹெட்ஃபோன் போன்ற மின்னணு சாதனங்களை காதுக்கு அருகில் வைத்திருக்க வேண்டாம்.
அதேபோல், ஒலியின் அளவையும் 70 டிபி கீழே வைத்து பயன்படுத்தவும். இல்லையென்றால், காது கேளாமை, காது நோய்த்தொற்றுகள், காதில் எரிச்சல் உணர்வு, டின்னிடஸ் போன்ற காது சம்பந்தமான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.