இனிப்பு என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் அல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். அல்வாவில் எத்தனையோ வகை இருக்கின்றன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் அல்வா. இந்த அல்வாவை செய்வது மிக மிக எளிது.
வெறும் 10 நிமிடங்கள் இருந்தாலே போதும் நாவில் கரையும் தேங்காய் பால் அல்வா செய்துவிடலாம். குழந்தைகளுக்கு கடையில் இனிப்புகளை வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே இது போன்ற இனிப்புகளை ஆரோக்கியமாக செய்துக் கொடுக்கலாம்.
அல்வா என்றாலே நெய் அதிகமாக தேவைப்படும். நெய் விற்கின்ற விலைக்கு நம்மில் பலரும் அல்வா செய்வதற்கே தயங்குவார்கள். ஆனால், நாம் செய்ய போகும் இந்த தேங்காய் பால் அல்வாவுக்கு 2-4 ஸ்பூன் நெய் இருந்தாலே போதும், 3 பேர் சாப்பிடும் அளவிற்கு அல்வா செய்துவிட முடியும். சரி வாங்க, தேங்காய் பால் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- முழு தேங்காய் – 1
- சோள மாவு – 2 ஸ்பூன்
- சர்க்கரை – 1/4 கப்
- முந்திரி – 7
- பாதாம் – 7
- உலர் திராட்சை – 7
- நெய் – 4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காயை இரண்டாக உடைத்து, தேங்காயை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு 2 பல்ஸ் விட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
அதிகமாக தண்ணீர் சேர்க்கக்கூடாது மறந்துவிடாதீர்கள். அரைத்த விழுதை ஒரு வெள்ளை காட்டன் துணியில் ஊற்றி நன்றாக பிழிந்து பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு, 2 ஸ்பூன் சோள மாவை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு பேன் (pan) அல்லது அடிகனமான வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 4 ஸ்பூன் நெய் விட்டு உருகியதும் எடுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி, திராட்சை மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு, எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் மற்றும் சோள மாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடங்களில் ஓரளவு அல்வா வெந்துருக்கும் அந்த சமயத்தில் சர்க்கரையை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.
அல்வா வாணலியில் ஒட்டாமல் திரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் 10 நிமிடத்தில் நாவில் கரையும் தித்திப்பான தேங்காய் பால் அல்வா ரெடி!
டிப்ஸ்:
இதில் பால் வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையை மேலும் அதிகரிக்கும்.
சர்க்கரை வேண்டாம் என்று நினைப்பவர்கள், நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
சுவை மேலும் அதிகரிக்க, 5 ஊற வைத்த பாதாம் பருப்பை விழுதாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.