இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் மனச்சங்கடமான பிரச்சனை தான் உடல் துர்நாற்றம். சில பேருக்கு என்ன தான் குளித்தாலும் உடல்துர்நாற்றம் மட்டும் போகவே போகாது. இதுக்கு வியர்வை ஒரு காரணமாக இருந்தாலும், உணவு பழக்க வழக்கம், ஹார்மோன் பிரச்சனை, மன அழுத்தம், உடல் பருமன், கால நிலை போன்றவைகளும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி வெளியே வீசும் உடல்துர்நாற்றத்தை சிலர் பர்ஃயூம் அடித்து மேனேஜ் செய்துக் கொள்வார்கள்.
இருப்பினும், அதுவும் கொஞ்சம் நேரம் மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதனால், பொது இடங்களுக்கு செல்லவே சற்று தயக்கம் ஏற்படும். இந்த துர்நாற்றமானது நமது உடலுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் பாதிக்க கூடியது. இருப்பினும், சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்தாலே இந்த உடல்துர்நாற்றத்தை நிரந்தமாக விரட்டியடிக்கலாம். இதோ உடல் துர்நாற்றத்தை நிரந்தரமாக போக்கும் எளிமையான 5 வீட்டு வைத்தியங்கள்.
எலுமிச்சை சாறு:
உடல் துர்நாற்றத்தை நீக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாற்றினை உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் இடங்களில் தடவி, பின்பு வழக்கம் போல் குளிக்கவும். எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலத்தன்மை உடல் துர்நாற்றத்தை அகற்றுவதோடு, வியர்வையை தடுத்து புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.
தேங்காய் எண்ணெய்:
உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் துர்நாற்றம் வீசுகிறது என்றால், உடல் முழுவதும் அல்லது வியர்வை அதிகமாக வெளியேறும் இடங்களில் தேங்காய் எண்ணெயை தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடுங்கள். இது வியர்வை துர்நாற்றத்தை அகற்றவதோடு, உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
வேப்பிலை:
இயற்கையாக அதிக மருத்துவ குணங்களை கொண்ட சிறந்த மூலிகையாக வேப்பிலை உள்ளது. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை பறித்து அதை மிக்ஸியில் நன்றாக அரைத்து, அந்த பேஸ்ட்டை அக்குள் பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து குளிப்பதன் மூலம் இயற்கையாகவே உடல் துர்நாற்றத்தை போக்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் சில வேப்பிலைகளை போட்டு குளிப்பதன் மூலமும் பாக்டீரியாவால் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
தக்காளி:
தக்காளியில் உள்ள ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க சிறந்த தீர்வாகும். தக்காளியை நன்றாக அரைத்து அந்த பேஸ்ட் அல்லது அதன் சாற்றை வியர்வை அதிகமாக உள்ள பகுதிகளில் தடவி, 15 – 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இதன் மூலம், வியர்வை துர்நாற்றம் அகற்றப்படுவதோடு, பாக்டீரியா வளர்ச்சியும் தடுக்கப்படும்.
பேக்கிங் சோடா:
ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிதளவு எலுமிச்சை சாற்றைக் கலந்து, அதிக வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி, 5 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி துர்நாற்றத்தை குறைக்க உதவும். மேலும், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் சோள மாவு இரண்டையும் கலந்து இயற்கை டியோட்ரண்டாக பயன்படுத்தலாம். ஒருவேளை உங்களுக்கு எரிச்சல் ஏற்பட்டால், உடனே தண்ணீரால் கழுவிவிடவும்.