இனிப்பு வகைகளிலேயே மைசூர் பாக் (Mysore Pak) அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மைசூர் பாகுவை பார்த்தாலே வாயில் எச்சில் ஊறும். அந்தளவிற்கு தனித்துவமான சுவையை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மைசூர் பாக் போலவே இருக்கும் மற்றொரு ஸ்வீட் தான் பெசன் பர்ஃபி. கடலை மாவு மற்றும் சர்க்கரையை வைத்து தயார் செய்யக்கூடிய இந்த பெசன் பர்ஃபியை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்வீட்களில் ஒன்று. பண்டிகை நாட்களில் நீங்களும் இதுமாதிரியான புது ஸ்வீட் ரெசிபியை செய்து கொடுத்து அசத்துங்கள். தற்போது, இந்த பதிவில் பெசன் பர்ஃபி (Besan Barfi) எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 1 கப்
- நெய் – 1/2 கப்
- ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
- நறுக்கிய பாதாம் பருப்பு – 2 ஸ்பூன்
- நறுக்கிய பிஸ்தா – 2 ஸ்பூன்
- சர்க்கரை – 3/4 கப்
- தண்ணீர் – 1/3 கப்
செய்முறை:
முதலில், எடுத்து வைத்துள்ள கடலை மாவை சலித்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் 1/2 கப் நெய் சேர்த்து சூடானதும், சலித்து வைத்துள்ள மாவை சேர்க்கவும்.
குறைந்த தீயில் வைத்து 20 நிமிடங்கள் நன்றாக வறுக்கவும். கடலை மாவு நிறம் சிறிது மாறி, பச்சை வாசனை போய், நல்ல வாசனை வர ஆரம்பிக்கும். கட்டியில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடலை மாவு பொன்னிறமாகவும் மாறியதும், நெய் நன்றாக திரிந்து வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கடாயில் 3/4 கப் சர்க்கரை மற்றும்1/3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 15 நிமிடங்கள் நன்றாக கொதித்தால், சர்க்கரை பாகு ஓரளவு கெட்டியாக மாறிவிடும்.
அந்த சமயத்தில் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து, கலந்துவிட்டு பாகு தன்மைக்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிடவும். இப்போது, தனியாக எடுத்து வைத்த கடலை மாவு கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து, தயாரித்த சர்க்கரை பாகை சேர்க்கவும்.
இரண்டையும் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கட்டியில்லாமலும், அடிப்பிடிக்காமலும் மிதமான தீயில் வேக வைக்கவும். கலவை கெட்டியானதும், ஒரு தட்டில் நெய் தடவி அதில் மாற்றிக் கொள்ளவும்.
அதன் மீது நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவிவிட்டு, தட்டின் வடிவத்திற்கு ஏற்ப கலவையை செட் செய்துவிடவும். இதை 30 நிமிடங்கள் ஆறவிடவும். அவற்றை சதுரங்களாக வெட்டி பரிமாறலாம்.
வாயில் வைத்ததும் கரையும் சுவையான பெசன் பர்ஃபி தயார்! இதை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம்.