TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18 வது சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று கோலாகாலமாக நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஐபிஎல் போட்டிகளுக்கு இந்திய மட்டுமின்றி உலகளவில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 போட்டியில் ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் ஐபிஎல் தொடக்க ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பாகும் நிலையில், ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். நாடு முழுவதும் உள்ள சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

கொல்கத்தா vs பெங்களூரு
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.
இரண்டு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 20 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் விளையாடிய 10 போட்டிகளில் கூட, கொல்கத்தாவே 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கேப்டன்கள் மாற்றம்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மெகா ஆக்ஷனில் பல மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், இரண்டு அணிகளின் கேப்டன்களும் வேறு அணிகளுக்கு சென்றனர். ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் கோப்பையை வென்ற கொல்கத்தா இம்முறை அஜிங்க்யா ரஹானே தலைமையில் களம் காண்கிறது. கடந்த முறை ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையில் களம் இறங்கிய பெங்களூரு அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் விளையாட உள்ளது.

10 அணிகள்
ஐபிஎல் 2025 18-வது சீசனில் மொத்தம் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘A’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘B’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
சாம்பியன் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறையும், மும்பை இந்தியன்ஸ் 5, ராஜஸ்தான் ராயல்ஸ் 1, டெக்கான் சார்ஜர்ஸ் , கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3, குஜராத் டைட்டன்ஸ் 1, சன்ரைசர்ஸ் ஐதரபாத் 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இதில் தோனி தலைமையில் சென்னை மற்றும் ரோகித் தலைமையில் மும்பை ஆகிய அணிகள் அதிகபட்சமாக 5 கோப்பைகளை வென்றுள்ளது.
ஐபிஎல் 18 வது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் 10 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தன. இந்நிலையில்,18வது சீசன் இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
முதல் போட்டியும் ஆர்சிபி அணியும்
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. அதே போல் கடந்த ஆண்டு நடைபெற்ற 17 வது சீசன் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே அணியுடன் சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மோதியது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியை நிலையில், ஆர்சிபி இம்முறையாவது வெற்றியுடன் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஈடன் கார்டன் மைதானம்
கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் விளையாட விரும்பும் மைதானங்களில் ஒன்றாக திகழ்கிறது ஈடன் கார்டன் மைதானம். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியும் வாய்ப்பு அதிகளவில் இருந்தாலும், தற்போதைய சூழலில், மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றத்தாழ்வு மைம் காரணமாக கொல்கத்தாவில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், 70% – 90% மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளாதால், மழையால் இன்று போட்டி பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகி ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் கிர்க்கெட்தொடரின் வரலாற்றில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த முதல் சீசனின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

பிளேயிங் லெவன் உத்தேசப்பட்டியல்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), மனீஷ் பாண்டே, ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், அன்ரிச் நோர்ட்ஜே, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்