இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் தூக்கமின்மை. ஏனென்றால், காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை மின்னனு சாதனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். அதிலும் சிலர் இரவில் தூங்காமல் கூட ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இதனால், கண்களுக்கு ஓய்வு என்பதே கொடுப்பதில்லை. இதற்கிடையில், மன அழுத்தம், குடும்ப சுமை, வேலை பளு, உடல் உழைப்பின்மை போன்ற பல காரணங்களாலும் இரவில் படுத்தால் தூக்கம் என்பதே வருவது கிடையாது.
தூங்காமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள்:
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். அப்போது தான் உடல் இயக்கம் சரியாக இருக்கும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் ஒரு மனிதனின் சராசரி தூக்கம் என்று பார்த்தால் 3-5 மணி நேரம் மட்டும் தான். இப்படி நீண்ட நாட்கள் தொடர்ந்து சரியாக தூங்காமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
குறிப்பாக, பெரியவர்களுக்கு இதய நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மனச்சோர்வு, செரிமான பிரச்சனை என எக்கச்சக்கமான உடல்நலக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பிரச்சனைகள் வந்தபிறகு மருந்து எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, ஆரம்பத்திலேயே நல்ல தூக்கத்தை பெற என்ன வழிகள் என்பதை தெரிந்துக் கொள்வதே புத்திசாலிதனம். அதற்கு நம் அன்றாட பழக்க வழக்கங்களில் சிலவற்றை தவிர்ப்பதன் மூலம் இயற்கையாகவே நிம்மதியான தூக்கத்தை வரவழைக்க முடியும்.
தூங்கச் செல்வதற்கு முன் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:
படுக்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்பியூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இரவு 7 மணிக்கு மேல் டீ, காபி, எனர்ஜி டிரிங்ஸ், கூல் டிரிங்ஸ் போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.
ஒரு சிலருக்கு காலையில் நேரமில்லாமல் மாலை அல்லது இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருக்கும். இப்படி தொடர்ந்து மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். இதனால், இரவில் தூக்கம் வராது. எனவே, மாலை 6 மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.
இரவில் எப்போதும் அதிகமாக சாப்பிடக்கூடாது, அதேபோல் மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், இறைச்சி மற்றும் ஃபாஸ்ட் புட் போன்றவற்றை இரவில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பகல் நேரங்களில் தூங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.
எளிமையான வீட்டு வைத்தியம்:
மேலே கூறப்பட்ட சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலமே இரவில் படுத்துவதன் தூக்கம் வந்துவிடும். ஒருவேளை அப்பவும் தூக்கம் வரவில்லை என்று நினைப்பவர்கள் சில எளிமையான வீட்டு வைத்தியங்களை பின்பற்றிலாம்.
தினமும் தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு 1 வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், வாழைப்பத்திற்கு தூக்கத்தை வரவழைக்கும் தன்மை உண்டு. இது உங்களுடைய தூக்கமின்மையை போக்கி, இயற்கையான தூக்கத்தை கொடுக்கும்.
தூக்கமின்மையை போக்க எளிமையான வீட்டு வைத்தியம் என்று சொன்னால் பால் தான். தினமும் 1 டம்ளர் மாட்டுப் பாலை கொதிக்க வைத்து, இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு குடித்து வந்தால், சீக்கரமே நல்ல தூக்கம் வரும். இனிப்பு கம்மியாக சேர்த்துக் கொள்ளவும்.
அதேபோல், தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் தினமும் நீங்களே விழித்திருக்க வேண்டும் என்றும் நினைத்தாலும் உங்களையே அறியாமல் தூக்கம் வந்துவிடும்.