10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாக அள்ளி வீசி மக்களை ஏமாற்றலாம் என்ற முனைப்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொண்டு வெற்றிப்பெற்றதாக பொதுமக்களே விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் திமுகவின் 3.5 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 100 நாட்கள் கூட சட்டமன்றம் நடைபெறவில்லை என்பது தான்.
கடந்த செப்டம்பர் மாதம் திமுக அதன் பவள விழாவை கொண்டாடியது. 75 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கும் திமுகவே, மக்கள் மன்றமாம் சட்டமன்றத்தை நடத்த தயங்குகிறது. சட்டமன்றத்தை நடத்தாமல் இருந்தால் மக்கள் பிரச்சனைகள் பொது வெளியில் வைக்க முடியாது என்ற கோழைத்தனமான எண்ணத்தில் திமுகவினர் இருக்கிறார்களா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மனதில் எழ தொடங்கிவிட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை கூட்டத்தொடர் முறையாக நடைபெற்றதாகவும் துறை சார்ந்த விவாதங்கள் நடத்தப்பட்டு அரசு செய்யும் தவறுகளை திருத்திகொள்ளும் மனப்பக்குவம் இருந்ததாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். அவர் வழி வந்த இன்றைய திமுக ஆட்சியாளர்கள் சட்டமன்றத்தை துச்சமாக கருதுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கலர் கலராக வாக்குறுதி கொடுத்து ஆட்சியை கைப்பற்றிய திமுக பெரிதாக எதையும் நிறைவேற்றவில்லை என்பதில் சந்தேகம் இல்லை. அதில் பல வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாமல் இருக்கலாம், சிலவற்றில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால், நிறைவேற்ற முடிந்ததையும் செய்யாமல் இருப்பது தான் திமுகவின் கையாளாகா தன்மை என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். அது தான் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர்.
திமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக நினைத்து முதல்வர் ஸ்டாலின் கனவு உலகில் வாழ்கிறார் என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பொதுமக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் விவாதிக்காமல் இருப்பது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் முதல்வர் ஸ்டாலின் அறிவுக்கு ஏன் எட்டவில்லை என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது.
குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் குறைந்தது ஒரு வாரம் நடக்கும். அதையும் திமுக அரசு 2 நாட்கள் மட்டுமே பெயருக்கு நடத்தியுள்ளது. இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்களே கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தங்களது தொகுதி பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த முடியாமல் மனம் வெம்பி கிடப்பதாக தகவல். இப்படி இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பொதுமக்களிடம் எப்படி வாக்கு கேட்க முடியும் என எம்.எல்.ஏ-க்கள் அப்செட்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் சில அமைச்சர்களும் மனமுடைந்து இருக்கிறார்களாம்.
அப்படி மீறி சட்டமன்றத்தை நடத்த வேண்டும் என கேட்டால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோபித்துக் கொள்வார்களோ? என்ற அச்சம் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் நல பிரச்சனைகளுக்கு செவி சாய்க்காமல், 2026 சட்டமன்ற தேர்தலில் மட்டும் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தாலும், தோல்வியில் தான் முடியும் என பொதுமக்கள் ஏச்சரிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, 2025-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.