இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாது. அந்தளவிற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் கூடவே ஆன்லைன் பரிவர்த்தனையும் (digital payment) தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையை சொல்லப் போனால் ஒரு குண்டூசி வாங்கினால் கூட ஆன்லைனில் தான் பணம் செலுத்துகின்றோம். இப்போதெல்லாம் பேங்கிற்கு செல்ல வேண்டிய வேலையும் இருப்பதில்லை எல்லாவற்றையும் யுபிஐ ஆப்கள் மூலமே செய்துக்கொள்கிறோம். அந்தளவிற்கு UPI ஆப்களின் பயன்பாடு எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.
ஆனால், இந்த UPI ஆப்களை பயன்படுத்த வேண்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் தனித்தனி பேங்க் அக்கவுண்ட் இருக்க வேண்டும். அதனால், பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்கள் UPI ஆப்களின் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அந்த கவலைக்கே இடமில்லை. இனி பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்களும் ஈஸியாக ஆன்லைன் பேமெண்ட் செய்யலாம். அப்படி ஒரு சூப்பரான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
UPI Circle வசதி:
இனி ‘யுபிஐ சர்க்கிள்’ (UPI Circle) என்ற வசதி மூலம் பேங்க் அக்கவுண்ட் இல்லாமலே உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒருவர் மட்டும் பேங்க் அக்கவுண்ட் வைத்திருந்து அவர் UPI ஆப்பை பயன்படுத்தினால், அதே பேங்க் அக்கவுண்ட் மூலம் அந்த வீட்டில் உள்ள மற்றவர்களும் தங்களது செல்போனில் உள்ள UPI ஆப் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்துக் கொள்ள முடியும்.
ஒரு அக்கவுண்ட்டை எத்தனை பேர் பயன்படுத்தலாம்?
இந்த UPI Circle மூலம் ஒரே பேங்க் அக்கவுண்ட்டை வைத்து அதிகபட்சமாக 5 இரண்டாம் பயனாளர்கள் (secondary users) பயன்படுத்தலாம். இதற்கு பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர் மற்றவர்களை தனது UPI Circle -இல் இணைக்க வேண்டியது அவசியம்.
இத்துடன், UPI Circle -இல் இணைக்கப்படும் இரண்டாம் பயனாளர்கள் தன்னிச்சையாக பரிவர்த்தனை செய்யலாமா அல்லது முதன்மை பயனாளரின் அனுமதியுடன் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியுமா என்பதை முதன்மை பயனாளர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் முதன்மை பயனாளர் (primary user), இரண்டாம் பயனாளரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் (transaction history) பார்க்க முடியும். அதாவது, முழுக்க முழுக்க இந்த யுபிஐ சர்க்கிள் மூலம் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுமே முதன்மை பயனாளரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.
UPI Circle வசதி மூலம் எவ்வளவு பண பரிமாற்றம் செய்ய முடியும்?
இரண்டாம் பயனாளர்கள் தன்னிச்சையாக பரிவர்த்தனை மேற்கொண்டால், ஒரு மாதத்திற்கு ரூ.15,000 வரை முதன்மை பயனாளரின் பேங்க் அக்கவுண்ட்டை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைக்கு முதன்மை பயனாளரின் அனுமதி தேவை இல்லை.
அதுவே முதன்மை பயனாளரின் அனுமதியுடன் மட்டுமே பரிவர்த்தனை மேற்கொண்டால், ஒரு மாதத்திற்கு ரூ5,000 வரை மட்டுமே முதன்மை பயனாளரின் பேங்க் அக்கவுண்ட்டை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்கு ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் முதன்மை பயனாளரின் அனுமதி தேவைப்படும்.
UPI Circle வசதி எந்த ஆப்களில் இருக்கும்?
இந்த யுபிஐ சர்க்கிள் வசதி ஆரம்பத்தில் BHIM ஆப்பில் மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது, கூகுள் பே (Google pay), போன்பே (PhonePe), பேடிம்எம் (Paytm) போன்ற பெரும்பாலான யுபிஐ ஆப்களிலும் UPI Circle வசதி வந்துவிட்டது. நீங்கள் இந்த ஆப்களை வைத்திருந்தால், உடனே செக் செய்து பாருங்கள்.
அதேபோல், இந்த புதிய வசதியை பாதுகாப்பானதாக இருக்குமா என்று பயப்படுவார்கள். ஆனால், அந்த பயமே வேண்டாம். UPI சர்க்கிள் வசதி NPCI மற்றும் RBI ஆல் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்படுகிறது. வழக்கமான UPI போலவே இதைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது.