விஜய் டிவில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் (baakiyalakshmi serial) ராதிகாவின் அண்ணன் கேரக்டரில் நடித்து வந்தவர் பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன். குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்த நேத்ரன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியலில் நடித்திருக்கிறார். சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி என பல சேனல்களிலும் முக்கிய சீரியல்களில் நடித்திருந்தார். சீரியலை போலவே, பல ரியாலிட்டி ஷோக்களிலும் அதிகமாக பங்கேற்றார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், மக்கள் மனதில் ஈஸியாக இடம் பிடித்துவிட்டார் நேத்ரன்.
காதல் திருமணம்
பின்னர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பிரபல சீரியல் நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபாவும் விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என பல சேனல்களில் முக்கிய சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றன. இவர்களுடைய மூத்த மகள் அபிநயா கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரியலில் நடித்திருக்கிறார். இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் எதிர்பாராமல் வந்தது கேன்சர்.
நேத்ரனுக்கு என்ன ஆச்சு?
ஆரம்பத்தில் நல்ல உடல்வாகுடன் இருந்த நேத்ரன் சமீப காலமாகவே மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். இந்த நிலையில் தான், ஆறு மாதங்களுக்கு முன் அவருடைய மகள் அபிநயா அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டிவ்வாகி இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அப்பாவுக்கு உடல்நிலை சில வாரங்களாகவே சரியில்ல. அவருக்கு கேன்சர் உறுதியாகியிருக்கு. சர்ஜரி பண்ணிட்டாங்க. ஆனா கல்லீரல் டேமேஜ் ஆகி இருக்குனு மறுபடியும் ஐசியு -ல வச்சிருக்காங்க. அப்பா சீக்கிரம் சரியாக வரணும் நீங்க எல்லாரும் ப்ரே பண்ணிக்கோங்க” என்று உருக்கமாக தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு தன்னுடைய அப்பா மீண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று நம்பிக்கையாக பேசி இருந்தார்.
திடீர் மரணம்
இந்த நிலையில் தான் எல்லோருடைய நம்பிக்கையும் பொய்யாய் போகும் வகையில், டிசம்பர் 03, 2024 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவருடைய மரணம் நிகழ்ந்துள்ளது. ஆறு மாதமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தும் அவருடைய உடல்நிலை சரியாகவில்லை. நேத்ரனின் இந்த திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கி இருக்கிறது. இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உருக்கமாக வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.