மழைக்காலம் வந்துவிட்டாலே, சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளும் கூடவே வந்துவிடுகின்றன. இதற்கு ஓயாமல் மழை பெய்வது மற்றும் மோசமான குளிர் காற்று வீசுவதே முக்கியமான காரணம். இந்த சமயத்தில் நோய்க்கிருமிகள் ரொம்ப வேகமாக பரவுத்தொடங்கிவிடுவதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பருவக்கால நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். இதற்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதே காரணம்.
எனவே, மழைக்காலங்களில் ஏற்படும் பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து உங்கள் பாதுகாத்துக் கொள்ள நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதே சிறந்த வழி. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? ரொம்பவே சிம்பிள். உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை பானங்களே போதும்.
இந்த பானங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. தற்போது, மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த பானங்களை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
இஞ்சி டீ
இஞ்சி டீ மழைக்காலங்களில் அதிகமானோர் குடிக்கும் ஆரோக்கிய பானமாகும். இந்த பானத்தை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதில் ஃபிரஸான இஞ்சியை சிறிதளவு தட்டிப்போட்டு, அத்துடன் 1 ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 3 டம்ளர் தண்ணீர் 1 டம்ளராக சுண்டியதும், அதை வடிக்கட்டி, 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 துளி எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். இது, வயிறு உப்புசம், செரிமான பிரச்சனைகளை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரித்து சளி, காய்ச்சலை விரட்டியடிக்கிறது.
ஆம்லா ஜூஸ்
ஆம்லாவில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது, இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, 2 நெல்லிக்காயை எடுத்து கொட்டை நீக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து, அத்துடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு, அதை வடிக்கட்டி தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதை காலை நேரத்தில் அருந்துவது கூடுதல் பலனை தரும்.
மஞ்சள் பால்
அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளன. குறிப்பாக மழைக்காலத்தில் இந்த மஞ்சளை சூடான பாலில் கலந்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது. 1 கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். பிறகு, சுவைக்காக 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 சிட்டிகை கருப்பு மிளகு தூளையும் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரையை தவிர்க்கவும்.
துளசி டீ
2 டம்ளர் தண்ணீரில் 1 கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், அதை வடிகட்டி 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்துவர, மழைக்காலத்தில் வரும் சளி, காய்ச்சல் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் பலப்படும். வயிறு உப்புசத்தையும் குறைக்கிறது.
லெமன், தேன் தண்ணீர்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிகவும் எளிமையான பானம் இது. வெறுமனே 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, குடித்துவரவும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நச்சுக்களை வெளியேற்ற உதவும். மேலும், செரிமானப் பிரச்சனைகளையும் போக்கும்.