வீடுகளில் கரப்பான் பூச்சி வருவது இயல்பு தான். அதுவும், இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே கரப்பான் பூச்சி தொல்லை தாங்கவே முடியாது. குறிப்பாக, சமையல் அறை, குளியல் அறை போன்ற பகுதிகளில் தான் அதிகமாக இருக்கும். எனவே, வீட்டில் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருந்தால் உடனே அதை ஒழித்துக்கட்ட வேண்டிய வேலையில் இறங்கிவிட வேண்டும். ஏனென்றால், இரவு நேரத்தில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் மீது மேயும்.
இது வீட்டில் இருப்பவர்களுக்கு மோசமான உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். கரப்பான் பூச்சிகளை விரட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை பயன்படுத்துவது வீட்டில் இருக்கும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு நல்லதல்ல. இருப்பினும், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே ஈஸியாக கரப்பான் பூச்சிகளை விரட்டியடிக்க முடியும். சரி, வாங்க கரப்பான் பூச்சியை விரட்டியடிக்க என்ன செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.
வெள்ளரிக்காய்
கரப்பான் பூச்சியை விரட்டி எளிமையான வீட்டு வைத்தியம் தான் வெள்ளரிக்காய். ஏனென்றால், வெள்ளரிக்காயின் வாசனை கண்டாலே கரப்பான் பூச்சிகளுக்கு ஆகாது. எனவே, தினமும் இரவில் வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி, அதை சமையறையில் கரப்பான் பூச்சி அதிகம் நடமாடும் பகுதிகளில் போட்டு விடுங்கள். மறுநாள் ஒரு கரப்பான் பூச்சிக் கூடாது இருக்காது.
பேக்கிங் சோடா, எலுமிச்சை, வெந்நீர்
கரப்பான் பூச்சிகளை விரட்ட, ஒரு மூடி போட்ட பாட்டிலில் 1 லிட்டர் வெந்நீரை ஊற்றி, 1 எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட்டு, அத்துடன் 4 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக குலுக்கி கொள்ளவும். இந்த தண்ணீரை கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் தெளிக்கவும்.
ஃபோரிக் அமிலம்
இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு ஃபோரிக் அமில பொடியை கரப்பான் பூச்சி அதிகமாக வரும் இடங்களில் தூவி விடவும். இந்த ஃபோரிக் அமில பொடியானது பூச்சி மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக்கொள்ளலாம். இது ஆபத்தானது என்பதால் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாதவாறு வைக்கப்பட வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள்.
வேம்பு
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அதில் 2 ஸ்பூன் வேப்ப எண்ணெயை சேர்த்து நன்றாக குலுக்கி, பூச்சிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் தெளிக்கவும். அல்லது ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகளை தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். மேலும் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக பிழிந்துக் கொள்ளவும். அந்த வேப்ப தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கரப்பான் பூச்சி நடமாடும் இடங்களில் தெளிக்கலாம். நறுமணம் கண்டாலே கரப்பான் பூச்சி தலைதெறிக்க ஓடும்.
வெங்காயம், மிளகு தூள், பூண்டு
பூண்டு மற்றும் வெங்காயத்தை முதலில் மிக்ஸி போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு பல்ஸ் விட்டு எடுத்து, வடித்துக் கொள்ளவும். அத்துடன் 2 ஸ்பூன் மிளகு தூளை சேர்த்து கலந்து, அதை ஸ்ப்ரே பாட்டலில் ஊற்றி, கரப்பான் பூச்சி அதிகம் நடமாடும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விடவும்.