நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு (Joseph Prabhu) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “Until we meet again Dad” என குறிப்பிட்டு ஸ்டோரி (Story) பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பிறகு, ‘மாஸ்கோவின் காவிரி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் தடம்பதித்தார்.
பின்னர், பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி, 10 எண்றதுக்குள்ள, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தெலுங்கில் மனம், மஜிலி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இருந்து பிரிந்துவிட்டனர்.
இந்த கசப்பான தருணங்களை சந்தித்த பிறகும், மனம் தளராத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் பாலிவுட்டில் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ’Family Man’ வெப் சீரிஸ் வரவேற்பை பெற்றது.