ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இருப்பினும், அந்த ஸ்வீட்டே ஆரோக்கியமானதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ஸ்வீட் தான் ரவா தேங்காய் பர்பி. இந்த பர்பியை செய்வது மிக மிக எளிது. சமைக்கவே தெரியாது என்று சொல்பவர்களும் ஈஸியாக செய்யலாம். இதில், சேர்க்கப்படும் அனைத்துப் பொருட்களும் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. சுவையாகவும் தித்திப்பாகவும் இருக்கும். சரி வாங்க, ரவா தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ரவை – 1/2 கப்
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- பொட்டுக்கடலை – 1/4 கப்
- வெல்லம் – 250 கிராம்
- நெய் – 2 ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
ரவா தேங்காய் பர்பி செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவை மற்றும் பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
- இரண்டையும் லேசாக ஆறவைத்து மிக்ஸி கரடுமுரடாக அரைத்துக் கொள்ளவும். ரொம்ப மென்மையாக அரைக்கக் கூடாது.
- பின்னர், ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள வெல்லம் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
- ஒரு டம்ளரில் சிறிதளவு தண்ணீர் பிடித்து, அதில் கொதிக்கக் கொண்டிருக்கும் பாகை ஒரு சொட்டுவிட்டு, அது கரையாமல் கெட்டியாக இருந்தால் பாகு தயார்.
- இப்போது, துருவிய தேங்காய், ரவை மற்றும் பொட்டுக்கடலை பவுடர் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். 2 ஸ்பூன் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு கலவை நன்றாக இலகி வரும் அந்த சமயத்தில் அடுப்பை அனைத்துவிடவும். அந்த கலவையை, நெய் தடவிய தட்டில் ஊற்றி சமன் செய்யவும்.
- 30 நிமிடங்கள் ஆறவிட்டு, செட் ஆனதும், ஒரு கத்தியை கொண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- தித்திப்பான ரவா தேங்காய் பர்பி ரெடி! இதை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரத்திற்கு வைத்திருந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.