ஒவ்வொரு பெண்ணிற்கும் தன்னுடைய கணவனோ காதலனோ தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும், அதிக பாசம் காட்ட வேண்டும் மற்றும் தனக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது வழக்கம். அதேபோல தான், ஆண்களும் தன்னுடைய மனைவியோ காதலியோ அதிக பாசம் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். இவை மனிதர்களுக்கே உள்ள இயல்பான குணங்களில் ஒன்று தான். இருப்பினும், பெண்களை காட்டிலும் ஆண்களே தன்னுடைய காதலி/மனைவியிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைப்பார்கள்.
அந்த எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாக சூழ்நிலையில் தான் இருவருக்கும் இடையே பிரச்சனை தலைதூக்க ஆரம்பிக்கிறது. இதை தடுத்து உறவை வலுப்படுத்த பெண்கள் தங்களது வாழ்க்கையில் சில விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும். இது ஆண்களுக்கு உங்கள் மீதான அன்பையும் பிரியத்தையும் அதிகப்படுத்த உதவும். நீங்கள் நினைப்பது போல கடினமான விஷயமெல்லாம் கிடையாது. சின்ன சின்ன விஷயங்கள் தான். அந்த சின்ன விஷயங்களே ஆண்களின் மனதை பெரியளவில் சந்தோஷப்படுத்தும்.
தவறை ஒப்புக்கொள்வது
காதலர்கள் மற்றும் தம்பதிகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை வருவது வழக்கம் தான். அந்த சமயத்தில் பெண்கள் மீதே தவறு இருந்தாலும், அதை அவர்கள் அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். காரணம் சுயமரியாதை அவர்களை தடுத்து நிறுத்திவிடுகிறது. அதனால், அவர் மீதான தவறை மறைப்பதற்கு ஆண்களை குறைக்கூற ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் ஆண்களை மேலும் வெறுப்படைய செய்யும். அது அடுத்தக்கட்ட பிரச்சனைக்கு கொண்டு சென்றுவிடும்.
இருப்பினும், ‘ஆரம்பத்திலேயே நான் செய்தது தான் தவறு’ என்று எந்தவொரு ஈகோவும் இல்லாமல், தவறை ஒப்புக்கொண்டால் உங்களின் மீது ஆண்களுக்கு அளவுக்கடந்த மரியாதையும் அன்பும் அதிகமாகும். எனவே, உங்கள் மீது தவறு இருந்தால் ஈகோவை ஓரம்கட்டி வைத்துவிட்டு, உடனே மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். அதுவே, உங்களுக்கும் சரி உங்களுடைய உறவுக்கும் சரி மிகவும் நல்லது.
விஷயம் பெரியதோ, சிறியதோ பாராட்டுவது
ஆண்களுக்கு தான் செய்யும் சிறிய முயற்சியையும் பெரியளவில் பாராட்டும் பெண்களை மிகவும் பிடிக்கும். அப்படி பாராட்டும்போது, அது அவர்களை தனித்துவமாக உணர வைப்பதோடு, பெரிய அளவில் சாதித்த ஒரு உணர்வை தரும். அது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவலாம். அதுமட்டுமல்லாமல், என்ன நடந்தாலும், தன்னை ஆதரிக்க ஒருவர் இருக்கிறார் என்ற தைரியத்தை அவர்களுக்கு கொடுக்கும்.
எனவே, உங்க பாட்னர் செய்யும் பெரிய அல்லது சிறிய விஷயத்தையும் பாராட்ட முயற்சி செய்யுங்கள். அதில் பிழையே இருந்தாலும், அதை சுட்டிக்காட்டாமல் எல்லாம் நல்லதுக்கே என்று கூறி தோழமை பாராட்டுங்கள். காதலியாக அல்லது மனைவியாக மட்டுமல்லாமல், சிறந்த தோழி என்ற ஸ்தானத்தையும் பெற்றுத்தரும்.
முக்கியத்துவம் & முன்னுரிமை கொடுப்பது
பெண்கள் எப்போதுமே தன்னுடைய கணவர்/காதலன் அவருடைய நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ இருக்கும்போது, தனக்கு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் தான் எதிர்ப்பார்ப்பார்கள். அதேபோல தான், ஆண்களும் எதிர்ப்பார்ப்பார்களாம்.
எனவே, எந்த வேலையாக இருந்தாலும் சரி உங்களுடைய காதலன்/கணவருக்கு சிறிய நேரத்தை ஒதுக்கி மெசேஜ் அல்லது வீடியோ கால் பேசுவது போன்றவற்றை செய்யுங்கள். அதேபோல், எப்போதும் ஆண்களே உங்களிடம் முதலில் பேச வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவர் பேசவில்லை என்றாலும், நீங்களாகவே அவர்களிடம் பேச தொடங்குங்கள். இதன் மூலம் உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்துக் கொள்வார்கள்.
வெளிப்படையாக இருப்பது
ஆண்களுக்கு தன்னுடைய காதல் பற்றி பெற்றோர்களை தவிர அனைவரிடமும் சொல்லி விடுவார்கள். ஏனென்றால், அவர்கள் உங்களை மனதார நேசிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களை தான் தன்னுடைய வாழ்க்கை என்று எண்ணத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால், ஒரு சில பெண்கள் தான் காதல் பற்றி தன்னுடைய நண்பர்களிடம் கூட சொல்லாமல் சீக்ரெட்டாகவே வைத்து இருப்பார்கள்.
இது ஆண்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இன்மையை உண்டாக்கும். எனவே, உங்கள் காதல் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய நேரத்தில் கட்டாயம் தெரிவித்துவிடுங்கள். அதேசமயம், தன்னுடைய காதலி வேறொரு ஆண்களிடம் பேசுவதை எந்தொரு காதலனும் ஒப்புக்கொள்ள மாட்டார். இருப்பினும், ஒளிவு மறைவு இல்லாமல், வெளிப்படையாக தெரிவித்துவிட்டால் அதை பற்றி பெரிதும் யோசிக்க மாட்டார்கள். எனவே, உங்களுக்கு ஆண்கள் நண்பர்கள் இருந்தால், தாராளமாக உங்கள் காதலன்/கணவரிடம் அறிமுகப்படுத்திவிடுங்கள்.
அனுமதி அளிப்பது
திருமணம் முடிந்துவிட்டாலோ அல்லது காதல் மலர ஆரம்பித்து விட்டாலோ ஆண்களிடம் இருந்து முதலில் பறிக்கப்படுவது அவர்களுடைய நட்பு வாழ்க்கை தான். அனைத்து ஆண்களுக்குமே தன்னுடைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வந்தவுடன் அந்த சுதந்திரத்தை ஏன் பறிக்க வேண்டும்?
நண்பர்களோடு விளையாட போகக் கூடாது, வெளியில் செல்லக் கூடாது, இரவில் அவர்களுடன் தங்கக் கூடாது, நண்பர்களுடன் ஃபோன் பேசக் கூடாது என்று எக்கச்சக்கமான நிபந்தனைகள். ஆனால், அவை அனைத்திற்கும் அனுமதி கொடுத்து அவருடைய சுதந்திரத்திற்கும், சந்தோஷத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். இதன் மூலம் தன்னை முழுவதும் புரிந்துக் கொள்வதற்கு ஒருவர் இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைவார்களாம்.