குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றோம். பொழுதுப்போக்கிற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்த ஆரம்பித்த நாம், இன்றைக்கு சோசியல் மீடியா இல்லையென்றால், ஒரு நாளை கூட கடக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அந்த அளவிற்கு நம்மை அடிமையாக்கிவிட்டது.
மற்றவர்களுடன் சமூக ரீதியாக இணைந்திருக்கவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், திறமைகளை வெளிப்படுத்தவும், வருமானம் ஈட்டவும், வணிகத்தை விரிவுப்படுத்தவும் சோசியல் மீடியாக்கள் தான் நமக்கு உதவி புரிகின்றன. சோசியல் மீடியாக்களால் என்னதான் பல நன்மைகள் இருந்தாலும், கூடவே தீமைகளும் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக, நமது மன ஆரோக்கியத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த பதிவில் சோசியல் மீடியாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்ப்போம்.
கிட்டத்தட்ட போதை
நீண்ட நேரம் சோசியல் மீடியா பயன்படுத்துவது, உங்களை அடிமைப்படுத்தலாம். ஒரு நாள் சோசியல் மீடியாவை பயன்படுத்தவில்லை என்றாலும், எதையோ இழந்தது போன்ற எண்ணம் தோன்றலாம். பதட்டத்தை தூண்டலாம். சோசியல் மீடியாவில் வெளியாகும் ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கும்போது, மற்றவர்கள் உங்களை விட சிறந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்ற உணர்வுகளை உங்களுக்கு அதிகப்படுத்தலாம்.
தனிமை உணர்வு
அந்த காலத்தில் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்துப் பொன்னான நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்தோம். ஆனால், இன்றைக்கு எந்த விஷேசங்களாக இருந்தாலும் சரி ஆளுக்கொரு ஃபோனை கையில் வைத்துக் கொண்டு தனியாகவே நேரத்தை செலவிட விரும்புகிறோம். அதைவிட, தினமும் நம் வீட்டில் இருப்பவர்களுடன் கூட பேச முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். இது நம்மை தனிமையாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணரவைப்பதோடு, கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளையும் அதிகப்படுத்தலாம்.
மனச்சோர்வு மற்றும் பதட்டம்
மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், மற்றவர்களுடன் சமூக ரீதியாக இணைந்திருப்பது அவசியம். இது மன அழுத்தம், மனச்சோர்வை குறைக்கலாம், ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கலாம். ஆனால், இன்றைக்கு சந்திப்பு என்ற வார்த்தைக்கே இடம் இருப்பதில்லை. வீடியோ கால் அல்லது சாட்டிங் மூலமே வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இதனால், மன அழுத்த ஹார்மோன் அதிகரித்து, ஒருவருக்கு அதிருப்தி, கவலை, வெறுப்பு போன்றவை உண்டாகும்.
கவனச்சிதறல்
அதிகமாக சோசியல் மீடியா பயன்படுத்துவது குறிப்பாக பதின்ம வயதினரை பெரிதும் பாதிக்கிறது. என்னதான் புது விஷயங்களை கற்றுக்கொள்ள சோசியல் மீடியாக்கள் குழந்தைகளுக்கு உதவினாலும், தொடர்ந்து அதை பயன்படுத்துவது படிப்பில் கவனச்சிதறலை உண்டாக்கலாம். சில சமயங்களில் சிந்திக்கும் திறனும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
தூக்கமின்மை
நம்மில் பலருக்கும் இரவு நேரங்களில் அதிக நேரம் செல்ஃபோன் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலர் விடிய விடிய செல்போனை பயன்படுத்துவார்கள். இதனால், தூக்கம் தடைப்பட்டு தூக்கமின்மை, தலைவலி, கண் வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இதே நிலை தொடர்ந்தால், இன்சோமேனியா போன்ற மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.