இன்றைய ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களால் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை (BP) இருக்கிறது. சிலர் இதை இரத்தக் கொதிப்பு என்பார்கள். இது நமது உடலில் அமைதியாகவே இருந்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சைலண்ட் கில்லர். இந்த வியாதிக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்காவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். இரத்தக் குழாய்களுக்கும், இதயத்திற்கும் இரத்த ஓட்டம் வேகமாக பாயும்போது ஏற்படுவதே உயர் இரத்தம் அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்ஷன் எனப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் வர காரணம்:
கடுமையான மன அழுத்தம், புகைப்பிடித்தல், உடல் பருமன், உட்கார்ந்த வாழ்க்கை முறை, பதப்படுத்தப்பட்ட கொழுப்பு உணவுகள், மது அருந்துதல், உப்பு அதிகமாக சாப்பிடுதல் போன்றவையே இந்த நோய்க்கு முக்கியமான காரணம். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர முறையான சிகிச்சை, ஆரோக்கியமான உணவு உட்கொள்வது மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதே சிறந்த வழி. இருப்பினும், சில உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலமும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உலர் பழங்கள் என்னென்ன என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்துக் கொள்வோம்.
வால்நட்:
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வால்நட்டில் அதிகம் இருக்கின்றன. இது இரத்த அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், குறுகலான இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது. மேலும், வால்நாட்டில் உள்ள லினோலெனிக் என்ற அமிலம் தமனிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வீக்கத்தையும் குறைக்கிறது.
பிஸ்தா:
சுவையில் மட்டுமல்ல, இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் சிறந்தவை தான் இந்த பிஸ்தா பருப்பு. இதில் அதிகளவு நார்ச்சத்தும், குறைந்த கலோரிகளும் உள்ளன. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆரோக்கியான கொழுப்புகள் உயர் இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைகிறது. தினமும் பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வீக்கத்தை குறைப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
பேரீச்சை:
பேரீச்சம் பழம் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துகளால் நிறைந்தவை. இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம் இரத்த நாளில் உள்ள பதற்றத்தை குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மேலும், பேரீச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது.
பாதாம் பருப்பு:
உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், ஆல்பா டோகோபெரோல் எனப்படும் கலவை காணப்படுகிறது. எனவே, தினமும் 4-6 பாதாம் பருப்புகளை ஊறவைத்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் கணிசமாக குறையும். மேலும், இதில் கொழுப்பு குறைவாகவும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.
முந்திரி:
முந்திரி பருப்பில் மெக்னீசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நார்ச்சத்தும் இதில் எக்கச்சமாக உள்ளது. எனவே, தினமும் 4-5 முந்திரி பருப்பை சாப்பிட்டு வாருங்கள்.
உலர் திராட்சை:
உலர் திராட்சையில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், உடலில் சோடியம் அளவை சமநிலைப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. மேலும், இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையை எளிதில் போக்க உதவுகிறது. தினமும் மூன்று வேலையும் தலா 4-5 உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் விரைவில் இரத்த அழுத்தம் குறைக்கப்படும்.